Monday, October 12, 2015

இறைச்சி உணவும் இந்து மத இலக்கியங்களும் - III பிராமண நூல்களும் இறைச்சி உணவும்

இறைச்சி உணவும் இந்து மத இலக்கியங்களும் - III

பிராமண நூல்களும் இறைச்சி உணவும்

இந்து இலக்கிய நூல்களின் வரிசையில் வேதங்களுக்கு அடுத்தபடியாக வருபவை பிராமண நூல்கள் ஆகும். இந்த வரிசையில் ஏராளமான நூல்கள் இருப்பினும் சதபத பிராமணம், ஐதரேய பிராமணம் போன்றவை பழமையானதும் மிக முக்கியமானவையும் ஆகும். இவை பெரும்பாலும் பலியிடுதல் சடங்குகள் மற்றும் அவற்றை நடத்த வேண்டிய முறை போன்றவற்றை விரித்துரைக்கும் விதமாக எழுதப்பட்டவை என்பதால் அவற்றில் இருந்து நாம் ஏராளமான தகவல்களைப் பெற முடிகிறது.

பலியிடுதல் சடங்குகளில் பலியிடப்பட்ட விலங்குகளைப் பற்றி பிராமண நூல்கள் தெளிவாக விளக்கி உள்ளன. புருஷமேதம், ராஜசூயம், வாஜபேயம், அஸ்வமேதம் என்று பல்வேறு பெயர்களில் நடத்தப்பட்ட பலியிடுதல் சடங்குகளில் நூற்றுக் கணக்கான பசுக்கள், எருமைகள், ஆடுகள் மற்றும் குதிரைகள் உள்ளிட்ட விலங்குகள் பலியிடப்பட்டன. விலங்குகளைப் பலியிடுதல்  இல்லை என்று சொன்னால் இது போன்ற சடங்குகளைப் பற்றி நினைத்துக் கூடப் பார்க்க முடியாது. அது மட்டுமின்றி. இது போன்ற சடங்குகளுக்குப் பின்னர் பலியிடப் பட்ட விலங்குகளின் இறைச்சியை அந்தச் சடங்குகளை நடத்தியவர்கள் உணவாக உட்கொள்வதும் மிகவும் சாதாரணமான ஏற்றுக் கொள்ளக் கூடிய பழக்கமாக இருந்தது.

உதாரணமாக, எந்த விலங்குகளின் இறைச்சியை உண்ணலாம் என்பதை சதபத பிராமணம் விரிவாகப் பட்டியல் இடுகிறது (சதபத பிராமணம் 3.2.1.12). அது மட்டுமின்றி, உணவுகளில் இறைச்சியே சிறந்தது என்றும் சதபத பிராமணம் சான்றிதழ் தருகிறது (சதபத பிராமணம் 11.7.1.3.9).

பிரம்ம தத்துவத்தை மிக விரிவாக எடுத்துரைத்த யாக்ஞவல்கியர் என்னும் முனிவர் தனக்கு பசுவின் இறைச்சி பிடிக்கும் என்றும் அதிலும் பசுவுடைய இளம் கன்றுவின் இறைச்சி மிகவும் பிடிக்கும் என்றும் கூறியதை சதபத பிராமணம் தெளிவாக எடுத்துரைக்கிறது.

பிராமண நூல்களின் காலத்திலேயே பசு இறைச்சியை உட்கொள்வதற்கு எதிரான கருத்துக்கள் தோன்றிவிட்டன என்பது உண்மை தான். அதற்கும் பிராமண நூல்களில் பல சான்றுகள் கிடைத்துள்ளன. ஆனால் பௌத்தம் மற்றும் சமண மதத்தின் தாக்கம் காரணமாகவே இத்தகைய நிலைப்பாட்டை பிராமண நூலாசிரியர்கள் மேற்கொண்டிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.

எப்படி இருப்பினும் கொல்லாமை என்னும் தத்துவத்தை புத்தன் மற்றும் மகாவீரர் ஆகிய இருவரிடம் இருந்து தான் இந்துமதம் பெரிதும் உள்வாங்கிக் கொண்டது என்பதும் அதற்கு முன்பு வரை அனைத்து உயிர்களையும் சடங்குகளின் பெயரால் கொன்றழிக்கும் விதமான முரட்டு நம்பிக்கைகளையே நாம் பின்பற்றி வந்தோம் என்பதும் உண்மை.

பசுவின் புனிதம் என்பது, புத்தனும் மகாவீரனும் அருளிய கொல்லாமை என்னும் தத்துவத்தைப் பசுவுக்கு மட்டுமே பொருத்தும் விதமாக புராண மதம் சார்ந்த நம்பிக்கை ஏற்படுத்திய திரிபு மட்டுமே தவிர வேறிற்லை.










Thursday, October 8, 2015

இறைச்சி உணவும் இந்து மத இலக்கியங்களும் - II

வேதங்களில் இறைச்சி உணவுக்கான சான்றுகள்


இந்துக்களின் மிகப் புனித நூலாக முன்வைக்கப் படும் ரிக் வேதம் மேய்ச்சல் கால ஆரிய சமூகத்தையும் அக்கால மக்களின் வாழ்க்கை முறையையும் எடுத்துக்காட்டுகிறது. எனவே அவர்களது வாழ்வில் கால்நடைகள் குறிப்பாக பசுக்கள் மிகுந்த முக்கியத்துவம் உடையவை ஆக இருந்தன. பசுவைக் குறிக்கும் காவ் என்னும் சொல் ரிக் வேதத்தில் நூற்றுக்கணக்கான முறைகள் குறிப்பிடப்பட்டிருக்கிறது. பசுக்களே ஆரம்பகால ரிக்வேத ஆரியர்களின் முக்கிய உடைமையாக இருந்தன. பசுவின் கன்றுகள் தாயிடம் ஓடிவரும் போது எழுப்பும் சப்தமே அவர்களின் காதுகளுக்கு மிக இனிமையானதாக இருந்தது.

ஆரிய இனக்குழுக்களின் தலைவர்கள் கோபதி என்று அழைக்கப்பட்டனர். ஆரிய சமூகத்திற்குப் பொதுவானதாக இருந்த கால்நடைகள் அடைக்கப்பட்ட இடம் கோத்ர என்று அழைக்கப்பட்டது. பிற்காலத்தில் இந்தச் சொல் இரத்த உறவு உடைய உறவினர்களைக் குறிப்பதாக மாற்றம் பெற்றது. ஆரியர்கள் தங்களுக்குள்ளும் ஆரியர் அல்லாதவர்களுடனும் நடத்திய சண்டைகள் கவிஷ்தி அல்லது கால்நடை கவர்தலுக்காக நடத்தப்பட்ட மோதல் என்று கூறப்பட்டன.

இவ்வாறு பசுக்கள் அவர்களின் வாழ்வில் முக்கியமானதாக இருந்த போதிலும், அதனைக் கொல்வதும் அதன் மாமிசத்தை உண்பதும் மறுக்கப்பட்டதாக இருக்கவில்லை. பசுக்கள் மட்டுமின்றி இதர கால்நடைகளைக் கொல்வதும் அவற்றின் இறைச்சியை உண்பதும் மறுக்கப்பட்டதாக இருக்கவில்லை.


ரிக் வேதத்தில் ஆடு, எருது மற்றும் குதிரை உள்ளிட்ட விலங்குகள் வேதக் கடவுளர்களுக்கு உணவாகப் படைக்கப்பட்டது பற்றி ஏராளமான சான்றுகள் கிடைக்கின்றன.

ஆரியர்களால் பெரிதும் போற்றப்பட்ட கடவுளான இந்திரன் காளையின் இறைச்சியை மிகவும் விரும்பி உண்டான் என்பதை ரிக் வேதம் பல முறை குறிப்பிடுகிறது (ரிக்வேதம் 10.86.13, 14). இந்திரனுக்காக நூறு எருமைகளை விஷ்ணு சமைத்துக் கொடுத்ததாக ஒரு ரிக்வேதப்பாடல் கூறுகிறது (ரிக்வேதம் 6.17.11) குதிரைகள், காளைகள், மலட்டுப் பசுக்கள் மற்றும் ஆடுகள் அக்கினியின் உணவாக இருந்தன என்று ரிக் வேதம் குறிப்பிடுகிறது. இவை அனைத்தும் பலியிடுதல் சடங்குகளில் பலியாகத் தரப்பட்டன. இவ்வாறு பலியிடப்பட்ட விலங்குகளை உண்ணுவது பழக்கமான ஒன்றாக இருந்தது என்பதைப் பிற்கால ஆதாரங்கள் நிரூபித்துள்ளன. மக்கள் தாம் விரும்பும் உணவை, மிகச் சிறந்ததாகக் கருதுவதையே தனது கடவுளர்களுக்குப் படைப்பார்கள். விலக்கப்பட்ட உணவைத் தனது கடவுளர்களுக்குப் படைக்க மாட்டார்கள் என்பதால் படையல் பொருட்கள் நிச்சயமாக அவர்களது விருப்பத்தைப் பிரதிபலிப்பவையே ஆகும்.
  
எனவே, வேத காலத்தில் இறைச்சி உணவு பொதுவாக வழக்கத்தில் இருந்தது என்பதில் சந்தேகம் இல்லை. மேலும் அது வெறுக்கவோ ஒதுக்கவோ படவில்லை என்பது உறுதியாகும்.

Tuesday, October 6, 2015

இறைச்சி உணவும் இந்து மத இலக்கியங்களும்


இறைச்சி உணவும் இந்து மத இலக்கியங்களும் - I

இறைச்சி உணவைக் குறிப்பாக மாட்டு இறைச்சியைத் தடை செய்ய வேண்டும் என்று இந்துத்வ வெறியர்கள் சில காலமாகக் கூப்பாடு போட்டு வருகிறார்கள். மும்பாய் உள்ளிட்ட பல பகுதிகளில் பாஜக ஆட்சியாளர்கள் இதனைச் சட்டவழியில் நடைமுறைப்படுத்த முற்பட்டுள்ளனர். மாட்டு இறைச்சி என்பது இந்துக்கள் எப்போதுமே உட்கொள்ளாத மற்றும் ஒதுக்கப்பட்ட ஒன்றாகும் என்ற மாயத் தோற்றத்தை ஏற்படுத்துவது அவர்கள் நோக்கம் ஆகும்.

இந்துக்கள் என்று சொல்லிக் கொள்பவர்களில் மிகப் பெரும்பான்மை ஆனவர்கள் வேதங்கள் உள்ளிட்ட இந்து மதவியல் இலக்கியங்களைப் படிக்காதவர்களாக இருக்கிறார்கள் என்ற நம்பிக்கை மட்டுமே இத்தகைய பிதற்றல்களை இவர்கள் இத்தனை நம்பிக்கையுடன் முன்வைப்பதற்குக் காரணமாக இருக்கிறது.

இதனைத் தாண்டி, இந்து மதவியல் இலக்கியங்களைப் படித்தால் வேத காலம் முதல் இறைச்சி உணவு உட்கொள்வது மிகச் சாதாரணமாக தினசரி நிகழ்வு ஆக இருந்தது என்பது மிகத் தெளிவாகும். இந்துக்களின் புனித நூல்களாகிய வேதங்கள், அதனை அடுத்து வந்த பிராமணங்கள், தத்துவப் பேழைகள் என்பதாக முன்னிறுத்தப் படும் உபநிடதங்கள் ஆகிய அனைத்தும் இதற்குப் போதும் என்று சொல்லும் அளவுக்குத் தேவையான சான்றுகளை முன்வைக்கின்றன.

ஆகவே இறைச்சி உணவை எதிர்க்கும் இந்துத்துவ வெறியர்களை அறிவுசார் அடிப்படையில் எதிர் கொள்ள வேண்டும் என்றால், இதனை நாம் மேலே சொன்னது போல வரலாற்றுச் சான்றுகளின் அடிப்படையில் மட்டுமே எதிர்கொள்ள வேண்டும். இல்லை என்றால் அது வெறும் நேர விரயமாக மட்டுமே இருக்க முடியும்.






Thursday, October 18, 2012

கங்கை நதி : புனிதம் முதல் புற்று நோய் வரை


கங்கை நதி இந்துக்களைப் பொறுத்தவரை மிகப் புனிதமான நதியாகும் என்ற நம்பிக்கை கடந்த பல நூறு ஆண்டுக்காலமாக இருந்து வருகிறது, இந்நதிக் கரையில் ஒருவரது சடலம் எரிக்கப்பட்டால் இனி மறு பிறவி இல்லை என்று சொல்லும் அளவு இந்த நதிக்கு இந்து மதம் பெருமைக்குரிய இடம் வழங்கியுள்ளது, ஆனால் இன்றைய கங்கை நதி இந்தப் பெருமைக்குப் பொருத்தமானது தானா என்று ஆராயப் புகுந்தால் அதிர்ச்சி மட்டுமே மிஞ்சுகிறது.


கங்கை நதியின் நீர் மிகவும் அதிகபட்சமாக மாசுபட்டுள்ளது என்பதை அறிந்து கொள்ள அறிவியல் ஆய்வுகள் எதுவும் தேவை இல்லை, வெறும் கண்ணால் பார்த்தால் மட்டுமே போதும். இந்துக்களுடைய பாவங்கள் அனைத்தையும் துடைத்து அவர்களுக்கு இறுதி விடுதலை தரும் என்ற நம்பிக்கையால் பல்லாண்டுக் காலமாக லட்சக்கணக்கான மக்கள் வணங்கிய இந்த நதி இன்று தொழிற்சாலைக் கழிவுகள், முறையாக எரிக்கப்படாத பிணங்கள், மதவியல் வழிபாட்டுச் சடங்குகளின் பகுதியாக நதியில் விடப்பட்ட மாசுபடுத்தும் பொருட்கள் ஆகியவற்றின் அளவுக்கு அதிகமாக தாக்குதலைத் தாங்க முடியாமல் கொஞ்சம் கொஞ்சமாக செத்துப் போனது.

சுவாமி அசீமானந்த்(?) என்பவர் கங்கை நதி மாசுபடுவதைத் தடுக்க வேண்டி உண்ணாவிரதம் இருந்து செத்துப் போன அதே சமயம் நாம் பாபா ராம் தேவ் என்னும் கூத்தாடியின் கோமாளிக் கூத்தை ரசித்துக் கொண்டிருந்தோம்.



இப்போதைய நிலைமை என்ன தெரியுமா? கங்கை நதி மக்களின் பாவத்தைக் களைகிறதோ இல்லையோ நமக்குத் தெரியாது. ஆனால், அதிகபட்சமாக மாசுபட்டதன் காரணமாக அது புற்று நோயின் ஊற்றுக் கண்ணாக மாறிவிட்டது என்று சமீபத்திய ஆய்வு உறுதி செய்கிறது.

நமது பாவத்தைக் களைய கங்கை நதிக்குப் போவதற்கு முன்னர் சிந்திப்போம். சமூக அக்கறை ஏதும் இன்றி, தனது பொய்யான முக்திக்காக மட்டுமே கங்கை என்னும் நதியைக் கொன்றதான குற்றச்சாட்டில் நம் அனைருக்கும் பங்கு உள்ளது என்பதை உணர்வோம்.

Wednesday, September 5, 2012

தகவல் அறியும் உரிமைச் சட்டம்

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு (தனக்கே தெரியாமல்) செய்த சாதனை என்று கூற வேண்டுமானால் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைத் தான் நாம் கூற வேண்டும். இதன் மூலம் இந்தியாவின் ஒரு கடைக்கோடி சாதாரண மனிதன் கூட அரசு இயந்திரத்தின் பல்வேறு துறைகள் எப்படி இயங்குகிறது, எத்தகைய திட்டங்களை அவை நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றன, அவற்றிற்கான செலவினங்கள் எத்தனை போன்றவை உள்ளிட்ட ஏராளமான கேள்விகளை எழுப்பி அவற்றிற்கு விடை கிடைக்கப் பெற முடியும்.

ஐந்து வருடத்திற்கு ஒரு முறை ஓட்டு மட்டுமே போடுவதால் கிடைக்காத அதிகாரத்தை சாதாரண மனிதனின் கையில் இது கொடுக்கிறது என்பதால், அரசியல் சட்டம் தரும் அதிகாரத்தை விடவும் அதிகப் பயன்தரும் ஒரு ஆயுதமாக இது இருக்கிறது என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால் வேதனைக்குரிய விசயம் என்னவென்றால் நம்மில் பலர் இத்தகைய வலிமைமிகுந்த ஆயுதம் ஒன்று உண்டு என்பதை உணரவில்லை.

இச்சட்டத்தின் கீழ் அரசு அலுவலகங்களின் ஒவ்வொரு துறையிலும் ஒரு அதிகாரி பொதுத் தகவல் அதிகாரி என்று அடையாளம் காட்டப்பட்டுள்ளார். அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு 30 தினங்களுக்குள் சம்பந்தப்பட்ட பொதுத் தகவல் அதிகாரி விடையளிக்க வேண்டும் என்பது சட்டபூர்வமாக உறுதி செய்யப்பட்ட உரிமையாகும். அவ்வாறு தகவல் அளிக்க ஒரு பொதுத் தகவல் அதிகாரி தவறினால், அது குறித்துப் புகார் செய்யவும் மேல் நடவடிக்கை எடுக்கவும் இச்சட்டம் போதுமான வழிமுறைகளை வகுத்துள்ளது.

இச்சட்டத்தையும் இதன் பயன்களையும் நாம் நன்கு உணர்ந்து கொண்டு பயன்படுத்தினால், பொது நலன் குறித்த பல்வேறு விசயங்களில் தேவையான தகவல்களைப் பெற்று, அரசியல் வாதிகள் மற்றும் ஊழல் பேர்வழிகளின் மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளை அம்பலப்படுத்த முடியும்.

ஓட்டுப்போடுவது மட்டுமே ஜனநாயகக் கடமை ஆகாது. ஐந்து வருடத்திற்கு ஒரு முறை ஓட்டுப் போட்டுவிட்டு, அடுத்த ஐந்து வருடங்கள் உறங்கிக் கிடப்பது பொறுப்பான செயலாகாது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் நமக்குக் கொடுத்துள்ள குறைந்தபட்ச அதிகாரங்களையாவது செவ்வனே பயன்படுத்தத் தெரிந்து கொள்ளாதவரை நாம் அரசியல்வாதிகளை மட்டும் குறை கூறி எந்தப் பயனும் இல்லை.

Saturday, August 25, 2012

"பாரதிக்கு தேசியப்பார்வை காட்டியது சமஸ்கிருத மொழி"

சுவாமி விவேகானந்தரின் 150வது பிறந்த நாளை முன்னிட்டு சமஸ்கிருத உத்சவம் 2012 என்ற பெயரில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றுள்ளது. பேராசிரியர் சாலமன் பாப்பையா மற்றும் ஏராளமான சமஸ்கிருத பேராசிரியர்கள் இதில் கலந்து கொண்டனர்.

பாரதியார் நெல்லையிலேயே இருந்து விடாமல் காசிக்கும் சென்றதால் தான் அவருக்கு தேசியப் பார்வை கிடைத்தது, மேலும் சமஸ்கிருத மொழியே அவருக்கு தேசியப் பார்வை காட்டியது என்றெல்லாம் வாய்க்கு வந்தபடி அவர்கள் பேசியுள்ளதை ஆகஸ்டு 20 அன்று தினமலர் நாளிதழ் செய்தியாக வெளியிட்டிருந்தது. சமஸ்கிருத மொழியின் சிறப்பைக் கூறுவதாகச் சொல்லிக் கொண்டு பாரதியை சிறுமைப்படுத்தியுள்ளது இது.

தனி ஒரு மனிதனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்று மானுடத்தைப் போற்றிய பாரதி காசிக்குப் போகமலிருந்தாலும் பாரதிக்கு நிச்சயம் தேசிய உணர்வு கிடைத்திருக்கும்.  பிஜித் தீவுக்
குப் போகாமல் தான் அங்கு தவித்த தமிழர்களுக்காக அவர் கண்ணீர் சிந்தினார். அவருக்கு சர்வதேசியப் பார்வை இருந்தது என்பதே இதற்குக் காரணம்.


காசிக்குப் போனதால் அவரது வாழ்வில் நடைபெற்ற நல்ல விசயம் ஒன்று உண்டென்றால் அவர் தனது பூணுலை அறுத்து எறிந்தது தான். பாரதியைப் பற்றித் தப்புத்தப்பாகப் பேசும் இது போன்றவர்கள் அதனைப் பற்றிப் பேசத் தயாராக இருக்க மாட்டார்கள்.

சமஸ்கிருத மொழியை வளர்ப்பதும் பரப்புவதும் அவர்களது சொந்த விசயம், அதில் யாரும் தலையிடப் போவது இல்லை. ஆனால் சமஸ்கிருதத்தைப் பெருமைப்படுத்துவதாகச் சொல்லிக் கொண்டு யுககவிஞனாகிய பாரதியை இவர்கள் கொச்சைப்படுத்துவக் காண நெஞ்சு பொறுக்குதில்லையே.

Sunday, August 12, 2012

பிருந்தாவனத்து விதவைகள்


பிருந்தாவனத்து விதவைகள்

உத்திரப்பிரதேச மாநிலம் மதுராவிற்கு அருகில் உள்ள பிருந்தாவனம் பல நூறு ஆண்டுகளாக இந்தியாவின் வைணவ நம்பிக்கையாளர்களுக்கு மிக முக்கியமான இடமாகும், இங்கு தான் கிருஷ்ணன் தனது கோபிகைகளுடன் லீலைகளில் ஈடுபட்டு மகிழ்ந்ததாக வைணவ நம்பிக்கை அமைந்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக, தனது கணவனை இழந்து விட்ட ஆதரவற்ற இந்துப் பெண்கள் தனது இறுதிக் காலத்தைக் கழிக்க இந்நகரத்திற்கு வந்து சேர்வதான ஒரு நம்பிக்கை தோன்றியது. பல விதவைப் பெண்கள் தனது உறவினர்களால் கைவிடப்பட்டு இங்கு வந்து சேர்ந்தனர் என்றால் மேலும் பலர் இங்கு உயிர் துறப்பதால் தான் இறைவனைச் சென்றடையலாம் என்ற நம்பிக்கையினால் உந்தப்பட்டு இங்கு வந்து சேர்ந்தனர். இப்படி மதுராவிற்கு வந்து சேர்ந்த பல ஆயிரக்கணக்கான விதவைகள் இங்கு வசித்து வருகின்றனர், இந்நகரை இந்தியாவின் ஆதரவற்ற விதவைகள் தலைநகரம் என்று கூறினால் அது மிகையாகாது.

இவர்கள் மரணத்திற்குப் பன்னர் தாங்கள் நினைத்தபடி கிருஷ்ணனைச் சென்று அடைகிறார்களா என்பது நமக்குத தெரியாது. ஆனால், உயிருடன் இருக்கும போது அவர்கள நடததும் அவல வாழ்க்கை உண்மையிலேயே பரிதாபத்திற்குறியது என்பதில் சந்தேகம் இல்லை. அவர்களில் பெரும்பாலானவர்கள தினந்தோறும் அரை வயிற்று உணவுக்குக் கூடப் போராடும் அவல நிலை மிகச் சாதாரணமான ஒன்றாகும்.

உத்திரப் பிரதேச மாநில அரசோ அல்லது மத்திய அரசோ இவர்களின் பரிதாபத்திற்குறிய நிலையை மாற்றுவதற்காக குறிப்பிடடுச் சொல்லத்தக்க அளவு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. மத்தியப் பெண்கள் ஆணையம். மனித உரிமை ஆணையம் போன்ற அரசு சார்ந்த அமைப்புகளும் இவ்விசயத்தில் கண்டும் காணாமலேயே இருந்து வருகின்றன.

இந்துக்களின் ஏகபோகக் காவலனாகத் தன்னைக் காட்டிக் கொள்ள முயற்சி செய்யும் ஆர்.எஸ்.எஸ் மற்றும் இதர சங் பரிவார் அமைப்புகள் இந்நிலையை மாற்றியமைக்க எவ்வித முயற்சியும் மேற்கொள்ளவில்லை. இதனால் தனக்கு அரசியல் ஆதாயம் எதுவும் கிடைக்க வாய்ப்பு இல்லை என்பதை அவர்கள் உணர்ந்து இருந்ததே இதற்கு ஒரு வேளை காரணமாக இருக்கும். கிருஷ்ண பக்தியை உலகெங்கும் விதைப்பதே தனது லட்சியம் என்று கூறிக் கொண்டு பளபளக்கும் பளிங்குக் கல்லால் செய்யப்பட்ட கோவில்களை அமைத்து வரும் இஸ்கான் எனப்படும் கிருஷ்ண பக்தி இயக்கமும் இவர்களைக் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை.

பிருந்தாவனத்து விதவைகள் கண்ணியமாக வாழ்ந்து மடிவதற்கு உதவி செய்தாகக் கூறிக் கொண்டு பல தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் புற்றீசல் போல் தோன்றி, உலகெங்கும் இருந்து அன்பளிப்புகளைப் பெற்ற போதிலும், அவர்களது வாழ்வில் எவ்வித மாற்றமும் இல்லை. கிருஷ்ணனின் லீலைகளைப் போன்றே, இந்த அமைப்புகளின் செயல்பாடுகளும் புரிந்து கொள்ள முடியாதவையாகவே இருக்கின்றன,

உயிருடன் இருக்கும் போது ஆதரவற்றவர்களாக வாழ்ந்து, கவனிக்க ஆளின்றி மரணத்தை எதிர்கொள்ளும் இவர்களில் பெரும்பாலானவர்கள இறந்து விட்டபின்னரும் அவர்களது சவஅடக்கம் கூட கண்ணியமாக நடைபெறுவதில்லை என்பது கசப்பான உண்மையாகும். மக்களின் காவலர்கள் என்று தன்னை அறிவித்துக் கொள்ளும் எந்த அரசியல் கட்சிகளோ அல்லது சமுக அமைப்போ இது குறித்து எதுவும் செய்யவில்லை.

இந்நிலையில், தேசிய சட்டவியல் சேவை அமைப்பு தொடர்ந்த பொதுநல வழக்கு ஒன்று பல மோசமான உண்மைகளை வெளிக்கொணர உதவி செய்தது. பிருந்தாவனத்தில் உயிர் துறக்கும் விதவைகளில் பெரும்பாலானவர்களின் சடலங்கள், அனாதைப் பிணங்களை விடக் கேவலமான முறையில் அழிக்கப்படுகின்றன என்பதை இந்த வழக்கு வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தது. இவர்களது உடல்கள் துண்டு துண்டாக வெட்டப்பட்டு கொஞ்சமும் மனிதாபிமானமற்ற விதத்தில் அழிக்கப்பட்டன என்னும் கொடுமையான நடைமுறையை இவ்வழக்கு எடுத்துக்காட்டியது. பெண்களைத் தேவியாக மதிப்பதாகக் கூறிக் கொள்ளும் இக்கொடுமை வேறொரு நாட்டில் நடந்திருந்தால், அன்றைய அரசும் ஆட்சியாளர்களும் பெரும் இடர்களைச் சந்திக்க நேர்ந்திருக்கும் என்பதை நாம் கூறத் தேவையில்லை,

இவ்வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், பிருந்தாவன விதவைகளின் சடலங்கள் அவர்களது மத நம்பிக்கையின் படி நல்லடக்கம் செய்யப்பட வேண்டும் என்றும், அதனை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் தற்போது தீர்ப்பு அளித்துள்ளனர். உலகமயமாக்கலுக்குப் பின்னர் சந்தை மயமாக்கப்பட்டு விட்ட இன்றைய சுரணையற்ற சமூகம் இதனைக் கண்டு கொள்ளப் போவதில்லை. ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தின் தலைப்பு என்ன, வரவிருக்கும் இடைத் தேர்தலில் எந்தக் கட்சி எந்த சாதிய அமைப்புடன் கூட்டணி அமைக்கப் போகிறது, எந்த நடிகை எந்த இயக்குனருடன் பிணக்கு கொண்டுள்ளார் என்பது போன்ற முக்கிய விசயங்கள் இன்றைய சமூகத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்தவை ஆகும்.

பிருந்தாவனத்து விதவைகளைக் கிருஷ்ணன் காப்பாற்றாது போனாலும், குறைந்தபட்சம் உச்ச நீதிமன்றமாவது காப்பாற்றும் என்று நம்புவோம்.

Wednesday, May 2, 2012

நித்தி, மதுரை ஆதீனம் மற்றும் ஆன்மீகம்


தமிழகத்தின் சிறப்புமிக்க சைவ மடாலயங்களில் ஒன்று மதுரை ஆதீனம் ஆகும். இந்த ஆதீனம் குறைந்தபட்சமாக ஆயிரம் ஆண்டுக்கும் மேற்பட்ட காலமாக இருந்து வந்துள்ளது என்பதை நாம் தமிழ் இலக்கிய வரலாற்றில் இருந்து அறிகிறோம். சைவ மதத்தின் சிறப்பைப் பரப்பவும், மக்களுக்கு அதன் சிறப்பம்சங்களை எடுத்துரைக்கவும் மட்டுமே இந்த ஆதீனம் தோற்றுவிக்கப்பட்டது என்று கூறப்படுகிறது. அதன் துவக்க காலம் தொட்டு இன்று வரை அதன் ஆயிரக்கணக்கான நம்பிக்கையாளர்கள் இந்த ஆதினத்திற்காக செல்வத்தை வாரிக் கொடுத்துள்ளனர்.

இத்தகைய பழமை பொருந்திய சைவ மடத்தின் இளைய வாரிசாக நித்தியை அறிவித்து, மதுரை ஆதீனத்தின் தற்போதைய மடாதிபதி அவர்கள் பெரும் சர்ச்சையைத் துவக்கி வைத்துள்ளார். ஆதினத்தின் மடாதிபதியாவதற்குத் தகுதியுள்ள ஏராளமான நபர்கள் ஏற்கனவே இருக்கும் சமயம், முறையற்ற பாலியல் தொடர்புகள் காரணமாக ஏராளமான சர்ச்சைகளில் சிக்கி, ஊடகங்களில் வெளியிடப்பட்ட ஒளிக்காட்சிகள் காரணமாக அசிங்கப்பட்டு, சில காலம் தலைமறைவாக இருந்துவிட்டுத் தற்போது வழக்குகளைச் சந்தித்துக் கொண்டிருக்கும் ஒரு போலி ஆன்மீகவாதியான நித்தியை விட மேலான ஒரு நபர் ஆதீனத்தின் இளைய வாரிசாகத் தயாராக இல்லையா என்ற ஒரு கேள்வி தவிர்க்க இயலாமல் எழுகிறது.

இன்றைய நாகரீக உலகில் முற்றும் துறந்தவர்களாகத் தன்னைக் காட்டிக் கொள்ளும் ஆன்மீகவாதிகளில் பெரும்பாலானவர்கள் உண்மையில் பொருளியல் ஆதாயங்கள் மற்றும் ஆன்மீகவாதியாக இருப்பதனால் கிடைக்கும் உடனடி அங்கீகாரம் ஆகியவற்றுக்காகவே ஆன்மீகத்தைத் தேர்ந்தெடுக்கிறார்கள் என்பது வெளிப்படையாகும். நித்தியின் ஆன்மீகமும் இந்த வகை ஆன்மீகமே. அவரது ஆன்மீகம் எந்த வகையானது என்பது ஒரு புறம் இருக்கட்டும். மதுரை ஆதீனம் இது வரை கடைப்பிடித்து வந்த சைவ மார்க்கத்திற்கு எந்த வகையில் அவர் சிறப்பான சேவை செய்துள்ளார் என்பதை இது வரை அவரும் விளக்கவில்லை. அவரைத் தனது வாரிசாகவும் ஆதீனத்தின் இளைய மடாதிபதியாகவும் அறிவித்துள்ள தற்போதைய மடாதிபதியும் அறிவிக்கவில்லை. ஒருவேளை தமது பக்தியாளர்களின் புரிதலுக்கு அப்பாற்பட்ட விசயமாக இது இருக்கும் என்று அவர் நினைத்திருக்கலாம்.

ஆனால் சைவ நம்பிக்கை என்னும் இந்து சமயத்தின் ஒரு போக்கைப் பின்பற்றுபவர்களுக்கு மட்டுமே ஆர்வம் உடையதாக இந்த விசயத்தை நாம் கருத முடியாது. சைவர்களுமே ஏராளமான கிளைப்போக்குகளை உடையவர்கள் என்பதையும், தமிழகத்திலேயே கூட ஏராளமான சைவ மடங்கள் உண்டு என்பதையும் நாம் அறிவோம்.

அப்படியாகின், பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி, அசிங்கப்பட்டு, பல நாட்கள் தலைமறைவாக இருந்து, இன்னமும் கூட பகிரங்கமாக நடமாட முடியாத ஒரு நபரைத் தனது வாரிசாக மதுரை ஆதீனகர்த்தர் அறிவிக்க வேண்டிய அவசியம் தான் என்ன?

இதன் அடிநாதமாக இருப்பது மதுரை ஆதீனகர்த்தரின் சைவ நம்பிக்கையை வளர்த்தெடுக்க வேண்டும் என்கிற தணியாத அவா என்பதாக நமக்குத் தோன்றவில்லை. இதையும் தாண்டி வேறு ஏதோ ஒரு காரணி இருந்தாக வேண்டும் என்று தோன்றுகிறது. நித்தியைத் தான் சைவ நம்பிக்கையை வளர்த்தெடுக்கவெனத் தோற்றமெடுத்த வாரிசு என்று அவர் உறுதிபட நம்பியிருந்தால் குறைந்தபட்சம் அவர் மீதான பாலியல் குற்றச்சாட்டு வழக்குகளின் மீது தீர்ப்பு வழங்கப்படும் வரையாவது காத்திருக்கலாம். ஆனால் அவசரக் கோலமாக அவரைத் தனது வாரிசு என்று அறிவிப்பதும், இதர சைவ மடங்கள் இதனை எதிர்க்கும் போதும் தனது முடிவை எதிர்ப்பதற்கு அவர்களுக்கு அருகதை இல்லை என்று கூறுவதும் மதுரை ஆதீனகர்த்தர் அவர்களின் நிலைக்கு அழகல்ல. சைவ நம்பிக்கையை வளர்த்தெடுப்பதற்கு நித்தியின் பங்களிப்பு எந்த அளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது என்பதும் அவருக்கே வெளிச்சம்.

மதுரை ஆதீனத்திற்குச் சொந்தமாக தமிழகம் முழுவதும் ஏராளமான அசையும் மற்றும் அசையாச் சொத்துக்கள் உள்ளன. இந்த ஆதீனத்திற்கு பல்லாண்டுகளாகத் தமது சொத்துக்களைத் தானம் செய்த அப்பாவிகள், ஒரு வேளை நித்தி போன்ற நல்லவர்கள் ஆதினகர்த்தராக இருந்திருந்தால் இது போன்று வாரி வழங்கியிருப்பார்களா என்பதைத் தைரியம் இருந்தால் மதுரை ஆதீனம் அவர்கள் தெளிவுபடுத்தட்டும்.

எனவே இது ஒரு அபாயகரமான ஒரு போக்கைத் துவக்கி வைக்கும் முயற்சியாகவே தோன்றுகிறது. பழம்பெருமை மிக்க ஒரு மத அமைப்பை மறைமுக முயற்சிகளின் வழியாக ஒரு கூட்டம் தன்வசமாக்க முயல்கிறதோ என்ற அச்சம் எழுகிறது. கல்விப் பட்டங்கள், அரசு வேலைவாய்ப்பு போன்றவை விலைபேசப்பட்ட காலம் போய் இது போன்ற போக்குகள் உலகைத் துறந்து விட்டதாகக் கூறிக் கொள்ளும் ஆன்மீக அமைப்புகளையும் ஊடுருவி விட்டதாக என்ற கேள்வியை எழுப்புகிறது. மதுரை ஆதினகர்த்தர் அவர்கள் இந்தக் கேள்விகளுக்கு விடையளிக்க முன்வருவாரா?

Sunday, November 22, 2009


வணக்கம்