Monday, October 12, 2015

இறைச்சி உணவும் இந்து மத இலக்கியங்களும் - III பிராமண நூல்களும் இறைச்சி உணவும்

இறைச்சி உணவும் இந்து மத இலக்கியங்களும் - III

பிராமண நூல்களும் இறைச்சி உணவும்

இந்து இலக்கிய நூல்களின் வரிசையில் வேதங்களுக்கு அடுத்தபடியாக வருபவை பிராமண நூல்கள் ஆகும். இந்த வரிசையில் ஏராளமான நூல்கள் இருப்பினும் சதபத பிராமணம், ஐதரேய பிராமணம் போன்றவை பழமையானதும் மிக முக்கியமானவையும் ஆகும். இவை பெரும்பாலும் பலியிடுதல் சடங்குகள் மற்றும் அவற்றை நடத்த வேண்டிய முறை போன்றவற்றை விரித்துரைக்கும் விதமாக எழுதப்பட்டவை என்பதால் அவற்றில் இருந்து நாம் ஏராளமான தகவல்களைப் பெற முடிகிறது.

பலியிடுதல் சடங்குகளில் பலியிடப்பட்ட விலங்குகளைப் பற்றி பிராமண நூல்கள் தெளிவாக விளக்கி உள்ளன. புருஷமேதம், ராஜசூயம், வாஜபேயம், அஸ்வமேதம் என்று பல்வேறு பெயர்களில் நடத்தப்பட்ட பலியிடுதல் சடங்குகளில் நூற்றுக் கணக்கான பசுக்கள், எருமைகள், ஆடுகள் மற்றும் குதிரைகள் உள்ளிட்ட விலங்குகள் பலியிடப்பட்டன. விலங்குகளைப் பலியிடுதல்  இல்லை என்று சொன்னால் இது போன்ற சடங்குகளைப் பற்றி நினைத்துக் கூடப் பார்க்க முடியாது. அது மட்டுமின்றி. இது போன்ற சடங்குகளுக்குப் பின்னர் பலியிடப் பட்ட விலங்குகளின் இறைச்சியை அந்தச் சடங்குகளை நடத்தியவர்கள் உணவாக உட்கொள்வதும் மிகவும் சாதாரணமான ஏற்றுக் கொள்ளக் கூடிய பழக்கமாக இருந்தது.

உதாரணமாக, எந்த விலங்குகளின் இறைச்சியை உண்ணலாம் என்பதை சதபத பிராமணம் விரிவாகப் பட்டியல் இடுகிறது (சதபத பிராமணம் 3.2.1.12). அது மட்டுமின்றி, உணவுகளில் இறைச்சியே சிறந்தது என்றும் சதபத பிராமணம் சான்றிதழ் தருகிறது (சதபத பிராமணம் 11.7.1.3.9).

பிரம்ம தத்துவத்தை மிக விரிவாக எடுத்துரைத்த யாக்ஞவல்கியர் என்னும் முனிவர் தனக்கு பசுவின் இறைச்சி பிடிக்கும் என்றும் அதிலும் பசுவுடைய இளம் கன்றுவின் இறைச்சி மிகவும் பிடிக்கும் என்றும் கூறியதை சதபத பிராமணம் தெளிவாக எடுத்துரைக்கிறது.

பிராமண நூல்களின் காலத்திலேயே பசு இறைச்சியை உட்கொள்வதற்கு எதிரான கருத்துக்கள் தோன்றிவிட்டன என்பது உண்மை தான். அதற்கும் பிராமண நூல்களில் பல சான்றுகள் கிடைத்துள்ளன. ஆனால் பௌத்தம் மற்றும் சமண மதத்தின் தாக்கம் காரணமாகவே இத்தகைய நிலைப்பாட்டை பிராமண நூலாசிரியர்கள் மேற்கொண்டிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.

எப்படி இருப்பினும் கொல்லாமை என்னும் தத்துவத்தை புத்தன் மற்றும் மகாவீரர் ஆகிய இருவரிடம் இருந்து தான் இந்துமதம் பெரிதும் உள்வாங்கிக் கொண்டது என்பதும் அதற்கு முன்பு வரை அனைத்து உயிர்களையும் சடங்குகளின் பெயரால் கொன்றழிக்கும் விதமான முரட்டு நம்பிக்கைகளையே நாம் பின்பற்றி வந்தோம் என்பதும் உண்மை.

பசுவின் புனிதம் என்பது, புத்தனும் மகாவீரனும் அருளிய கொல்லாமை என்னும் தத்துவத்தைப் பசுவுக்கு மட்டுமே பொருத்தும் விதமாக புராண மதம் சார்ந்த நம்பிக்கை ஏற்படுத்திய திரிபு மட்டுமே தவிர வேறிற்லை.










No comments:

Post a Comment