பிருந்தாவனத்து விதவைகள்
உத்திரப்பிரதேச மாநிலம் மதுராவிற்கு அருகில் உள்ள பிருந்தாவனம்
பல நூறு ஆண்டுகளாக இந்தியாவின் வைணவ நம்பிக்கையாளர்களுக்கு மிக முக்கியமான
இடமாகும், இங்கு தான் கிருஷ்ணன் தனது கோபிகைகளுடன் லீலைகளில் ஈடுபட்டு மகிழ்ந்ததாக
வைணவ நம்பிக்கை அமைந்துள்ளது.
இதன் தொடர்ச்சியாக, தனது கணவனை இழந்து விட்ட ஆதரவற்ற இந்துப்
பெண்கள் தனது இறுதிக் காலத்தைக் கழிக்க இந்நகரத்திற்கு வந்து சேர்வதான ஒரு
நம்பிக்கை தோன்றியது. பல விதவைப் பெண்கள் தனது உறவினர்களால் கைவிடப்பட்டு இங்கு
வந்து சேர்ந்தனர் என்றால் மேலும் பலர் இங்கு உயிர் துறப்பதால் தான் இறைவனைச்
சென்றடையலாம் என்ற நம்பிக்கையினால் உந்தப்பட்டு இங்கு வந்து சேர்ந்தனர். இப்படி
மதுராவிற்கு வந்து சேர்ந்த பல ஆயிரக்கணக்கான விதவைகள் இங்கு வசித்து வருகின்றனர்,
இந்நகரை இந்தியாவின் ஆதரவற்ற விதவைகள் தலைநகரம் என்று கூறினால் அது மிகையாகாது.
இவர்கள் மரணத்திற்குப் பன்னர் தாங்கள் நினைத்தபடி கிருஷ்ணனைச்
சென்று அடைகிறார்களா என்பது நமக்குத தெரியாது. ஆனால், உயிருடன் இருக்கும போது
அவர்கள நடததும் அவல வாழ்க்கை உண்மையிலேயே பரிதாபத்திற்குறியது என்பதில் சந்தேகம்
இல்லை. அவர்களில் பெரும்பாலானவர்கள தினந்தோறும் அரை வயிற்று உணவுக்குக் கூடப்
போராடும் அவல நிலை மிகச் சாதாரணமான ஒன்றாகும்.
உத்திரப் பிரதேச மாநில அரசோ அல்லது மத்திய அரசோ இவர்களின்
பரிதாபத்திற்குறிய நிலையை மாற்றுவதற்காக குறிப்பிடடுச் சொல்லத்தக்க அளவு எந்த
முயற்சியும் எடுக்கவில்லை. மத்தியப் பெண்கள் ஆணையம். மனித உரிமை ஆணையம் போன்ற அரசு
சார்ந்த அமைப்புகளும் இவ்விசயத்தில் கண்டும் காணாமலேயே இருந்து வருகின்றன.
இந்துக்களின் ஏகபோகக் காவலனாகத் தன்னைக் காட்டிக் கொள்ள
முயற்சி செய்யும் ஆர்.எஸ்.எஸ் மற்றும் இதர சங் பரிவார் அமைப்புகள் இந்நிலையை
மாற்றியமைக்க எவ்வித முயற்சியும் மேற்கொள்ளவில்லை. இதனால் தனக்கு அரசியல் ஆதாயம்
எதுவும் கிடைக்க வாய்ப்பு இல்லை என்பதை அவர்கள் உணர்ந்து இருந்ததே இதற்கு ஒரு வேளை
காரணமாக இருக்கும். கிருஷ்ண பக்தியை உலகெங்கும் விதைப்பதே தனது லட்சியம் என்று
கூறிக் கொண்டு பளபளக்கும் பளிங்குக் கல்லால் செய்யப்பட்ட கோவில்களை அமைத்து வரும்
இஸ்கான் எனப்படும் கிருஷ்ண பக்தி இயக்கமும் இவர்களைக் கண்டு கொண்டதாகத்
தெரியவில்லை.
பிருந்தாவனத்து விதவைகள் கண்ணியமாக வாழ்ந்து மடிவதற்கு உதவி
செய்தாகக் கூறிக் கொண்டு பல தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் புற்றீசல் போல் தோன்றி,
உலகெங்கும் இருந்து அன்பளிப்புகளைப் பெற்ற போதிலும், அவர்களது வாழ்வில் எவ்வித
மாற்றமும் இல்லை. கிருஷ்ணனின் லீலைகளைப் போன்றே, இந்த அமைப்புகளின் செயல்பாடுகளும்
புரிந்து கொள்ள முடியாதவையாகவே இருக்கின்றன,
உயிருடன் இருக்கும் போது ஆதரவற்றவர்களாக வாழ்ந்து, கவனிக்க
ஆளின்றி மரணத்தை எதிர்கொள்ளும் இவர்களில் பெரும்பாலானவர்கள இறந்து விட்டபின்னரும்
அவர்களது சவஅடக்கம் கூட கண்ணியமாக நடைபெறுவதில்லை என்பது கசப்பான உண்மையாகும். மக்களின்
காவலர்கள் என்று தன்னை அறிவித்துக் கொள்ளும் எந்த அரசியல் கட்சிகளோ அல்லது சமுக
அமைப்போ இது குறித்து எதுவும் செய்யவில்லை.
இந்நிலையில், தேசிய சட்டவியல் சேவை அமைப்பு தொடர்ந்த பொதுநல
வழக்கு ஒன்று பல மோசமான உண்மைகளை வெளிக்கொணர உதவி செய்தது. பிருந்தாவனத்தில் உயிர்
துறக்கும் விதவைகளில் பெரும்பாலானவர்களின் சடலங்கள், அனாதைப் பிணங்களை விடக்
கேவலமான முறையில் அழிக்கப்படுகின்றன என்பதை இந்த வழக்கு வெளிச்சத்திற்குக் கொண்டு
வந்தது. இவர்களது உடல்கள் துண்டு துண்டாக வெட்டப்பட்டு கொஞ்சமும் மனிதாபிமானமற்ற
விதத்தில் அழிக்கப்பட்டன என்னும் கொடுமையான நடைமுறையை இவ்வழக்கு எடுத்துக்காட்டியது.
பெண்களைத் தேவியாக மதிப்பதாகக் கூறிக் கொள்ளும் இக்கொடுமை வேறொரு நாட்டில்
நடந்திருந்தால், அன்றைய அரசும் ஆட்சியாளர்களும் பெரும் இடர்களைச் சந்திக்க
நேர்ந்திருக்கும் என்பதை நாம் கூறத் தேவையில்லை,
இவ்வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், பிருந்தாவன விதவைகளின்
சடலங்கள் அவர்களது மத நம்பிக்கையின் படி நல்லடக்கம் செய்யப்பட வேண்டும் என்றும்,
அதனை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் தற்போது தீர்ப்பு அளித்துள்ளனர். உலகமயமாக்கலுக்குப்
பின்னர் சந்தை மயமாக்கப்பட்டு விட்ட இன்றைய சுரணையற்ற சமூகம் இதனைக் கண்டு கொள்ளப்
போவதில்லை. ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தின் தலைப்பு என்ன,
வரவிருக்கும் இடைத் தேர்தலில் எந்தக் கட்சி எந்த சாதிய அமைப்புடன் கூட்டணி
அமைக்கப் போகிறது, எந்த நடிகை எந்த இயக்குனருடன் பிணக்கு கொண்டுள்ளார் என்பது
போன்ற முக்கிய விசயங்கள் இன்றைய சமூகத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்தவை ஆகும்.
பிருந்தாவனத்து விதவைகளைக் கிருஷ்ணன் காப்பாற்றாது போனாலும்,
குறைந்தபட்சம் உச்ச நீதிமன்றமாவது காப்பாற்றும் என்று நம்புவோம்.
No comments:
Post a Comment