தமிழகத்தின் சிறப்புமிக்க சைவ
மடாலயங்களில் ஒன்று மதுரை ஆதீனம் ஆகும். இந்த ஆதீனம் குறைந்தபட்சமாக ஆயிரம்
ஆண்டுக்கும் மேற்பட்ட காலமாக இருந்து வந்துள்ளது என்பதை நாம் தமிழ் இலக்கிய
வரலாற்றில் இருந்து அறிகிறோம். சைவ மதத்தின் சிறப்பைப் பரப்பவும், மக்களுக்கு அதன்
சிறப்பம்சங்களை எடுத்துரைக்கவும் மட்டுமே இந்த ஆதீனம் தோற்றுவிக்கப்பட்டது என்று
கூறப்படுகிறது. அதன் துவக்க காலம் தொட்டு இன்று வரை அதன் ஆயிரக்கணக்கான
நம்பிக்கையாளர்கள் இந்த ஆதினத்திற்காக செல்வத்தை வாரிக் கொடுத்துள்ளனர்.
இத்தகைய பழமை பொருந்திய சைவ
மடத்தின் இளைய வாரிசாக நித்தியை அறிவித்து, மதுரை ஆதீனத்தின் தற்போதைய
மடாதிபதி அவர்கள் பெரும் சர்ச்சையைத் துவக்கி வைத்துள்ளார். ஆதினத்தின்
மடாதிபதியாவதற்குத் தகுதியுள்ள ஏராளமான நபர்கள் ஏற்கனவே இருக்கும் சமயம், முறையற்ற
பாலியல் தொடர்புகள் காரணமாக ஏராளமான சர்ச்சைகளில் சிக்கி, ஊடகங்களில்
வெளியிடப்பட்ட ஒளிக்காட்சிகள் காரணமாக அசிங்கப்பட்டு, சில காலம் தலைமறைவாக
இருந்துவிட்டுத் தற்போது வழக்குகளைச் சந்தித்துக் கொண்டிருக்கும் ஒரு போலி ஆன்மீகவாதியான
நித்தியை விட மேலான ஒரு நபர் ஆதீனத்தின் இளைய வாரிசாகத் தயாராக இல்லையா என்ற ஒரு
கேள்வி தவிர்க்க இயலாமல் எழுகிறது.
இன்றைய நாகரீக உலகில் முற்றும்
துறந்தவர்களாகத் தன்னைக் காட்டிக் கொள்ளும் ஆன்மீகவாதிகளில் பெரும்பாலானவர்கள்
உண்மையில் பொருளியல் ஆதாயங்கள் மற்றும் ஆன்மீகவாதியாக இருப்பதனால் கிடைக்கும் உடனடி
அங்கீகாரம் ஆகியவற்றுக்காகவே ஆன்மீகத்தைத் தேர்ந்தெடுக்கிறார்கள் என்பது
வெளிப்படையாகும். நித்தியின் ஆன்மீகமும் இந்த வகை ஆன்மீகமே. அவரது
ஆன்மீகம் எந்த வகையானது என்பது ஒரு புறம் இருக்கட்டும். மதுரை ஆதீனம் இது வரை
கடைப்பிடித்து வந்த சைவ மார்க்கத்திற்கு எந்த வகையில் அவர் சிறப்பான சேவை
செய்துள்ளார் என்பதை இது வரை அவரும் விளக்கவில்லை. அவரைத் தனது வாரிசாகவும்
ஆதீனத்தின் இளைய மடாதிபதியாகவும் அறிவித்துள்ள தற்போதைய மடாதிபதியும்
அறிவிக்கவில்லை. ஒருவேளை தமது பக்தியாளர்களின் புரிதலுக்கு அப்பாற்பட்ட விசயமாக
இது இருக்கும் என்று அவர் நினைத்திருக்கலாம்.
ஆனால் சைவ நம்பிக்கை என்னும்
இந்து சமயத்தின் ஒரு போக்கைப் பின்பற்றுபவர்களுக்கு மட்டுமே ஆர்வம் உடையதாக இந்த
விசயத்தை நாம் கருத முடியாது. சைவர்களுமே ஏராளமான கிளைப்போக்குகளை உடையவர்கள்
என்பதையும், தமிழகத்திலேயே கூட ஏராளமான சைவ மடங்கள் உண்டு என்பதையும் நாம்
அறிவோம்.
அப்படியாகின், பாலியல்
குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி, அசிங்கப்பட்டு, பல நாட்கள் தலைமறைவாக இருந்து,
இன்னமும் கூட பகிரங்கமாக நடமாட முடியாத ஒரு நபரைத் தனது வாரிசாக மதுரை
ஆதீனகர்த்தர் அறிவிக்க வேண்டிய அவசியம் தான் என்ன?
இதன் அடிநாதமாக இருப்பது மதுரை
ஆதீனகர்த்தரின் சைவ நம்பிக்கையை வளர்த்தெடுக்க வேண்டும் என்கிற தணியாத அவா என்பதாக
நமக்குத் தோன்றவில்லை. இதையும் தாண்டி வேறு ஏதோ ஒரு காரணி இருந்தாக வேண்டும் என்று
தோன்றுகிறது. நித்தியைத் தான் சைவ நம்பிக்கையை வளர்த்தெடுக்கவெனத் தோற்றமெடுத்த
வாரிசு என்று அவர் உறுதிபட நம்பியிருந்தால் குறைந்தபட்சம் அவர் மீதான பாலியல்
குற்றச்சாட்டு வழக்குகளின் மீது தீர்ப்பு வழங்கப்படும் வரையாவது காத்திருக்கலாம்.
ஆனால் அவசரக் கோலமாக அவரைத் தனது வாரிசு என்று அறிவிப்பதும், இதர சைவ மடங்கள் இதனை
எதிர்க்கும் போதும் தனது முடிவை எதிர்ப்பதற்கு அவர்களுக்கு அருகதை இல்லை என்று
கூறுவதும் மதுரை ஆதீனகர்த்தர் அவர்களின் நிலைக்கு அழகல்ல. சைவ நம்பிக்கையை
வளர்த்தெடுப்பதற்கு நித்தியின் பங்களிப்பு எந்த அளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக
இருந்தது என்பதும் அவருக்கே வெளிச்சம்.
மதுரை ஆதீனத்திற்குச் சொந்தமாக
தமிழகம் முழுவதும் ஏராளமான அசையும் மற்றும் அசையாச் சொத்துக்கள் உள்ளன. இந்த
ஆதீனத்திற்கு பல்லாண்டுகளாகத் தமது சொத்துக்களைத் தானம் செய்த அப்பாவிகள், ஒரு
வேளை நித்தி போன்ற நல்லவர்கள் ஆதினகர்த்தராக இருந்திருந்தால் இது போன்று வாரி
வழங்கியிருப்பார்களா என்பதைத் தைரியம் இருந்தால் மதுரை ஆதீனம் அவர்கள்
தெளிவுபடுத்தட்டும்.
No comments:
Post a Comment