கங்கை நதி இந்துக்களைப் பொறுத்தவரை மிகப் புனிதமான நதியாகும் என்ற நம்பிக்கை கடந்த பல நூறு ஆண்டுக்காலமாக இருந்து வருகிறது, இந்நதிக் கரையில் ஒருவரது சடலம் எரிக்கப்பட்டால் இனி மறு பிறவி இல்லை என்று சொல்லும் அளவு இந்த நதிக்கு இந்து மதம் பெருமைக்குரிய இடம் வழங்கியுள்ளது, ஆனால் இன்றைய கங்கை நதி இந்தப் பெருமைக்குப் பொருத்தமானது தானா என்று ஆராயப் புகுந்தால் அதிர்ச்சி மட்டுமே மிஞ்சுகிறது.
கங்கை நதியின் நீர் மிகவும் அதிகபட்சமாக மாசுபட்டுள்ளது என்பதை அறிந்து கொள்ள அறிவியல் ஆய்வுகள் எதுவும் தேவை இல்லை, வெறும் கண்ணால் பார்த்தால் மட்டுமே போதும். இந்துக்களுடைய பாவங்கள் அனைத்தையும் துடைத்து அவர்களுக்கு இறுதி விடுதலை தரும் என்ற நம்பிக்கையால் பல்லாண்டுக் காலமாக லட்சக்கணக்கான மக்கள் வணங்கிய இந்த நதி இன்று தொழிற்சாலைக் கழிவுகள், முறையாக எரிக்கப்படாத பிணங்கள், மதவியல் வழிபாட்டுச் சடங்குகளின் பகுதியாக நதியில் விடப்பட்ட மாசுபடுத்தும் பொருட்கள் ஆகியவற்றின் அளவுக்கு அதிகமாக தாக்குதலைத் தாங்க முடியாமல் கொஞ்சம் கொஞ்சமாக செத்துப் போனது.
சுவாமி அசீமானந்த்(?) என்பவர் கங்கை நதி மாசுபடுவதைத் தடுக்க வேண்டி உண்ணாவிரதம் இருந்து செத்துப் போன அதே சமயம் நாம் பாபா ராம் தேவ் என்னும் கூத்தாடியின் கோமாளிக் கூத்தை ரசித்துக் கொண்டிருந்தோம்.
இப்போதைய நிலைமை என்ன தெரியுமா? கங்கை நதி மக்களின் பாவத்தைக் களைகிறதோ இல்லையோ நமக்குத் தெரியாது. ஆனால், அதிகபட்சமாக மாசுபட்டதன் காரணமாக அது புற்று நோயின் ஊற்றுக் கண்ணாக மாறிவிட்டது என்று சமீபத்திய ஆய்வு உறுதி செய்கிறது.
நமது பாவத்தைக் களைய கங்கை நதிக்குப் போவதற்கு முன்னர் சிந்திப்போம். சமூக அக்கறை ஏதும் இன்றி, தனது பொய்யான முக்திக்காக மட்டுமே கங்கை என்னும் நதியைக் கொன்றதான குற்றச்சாட்டில் நம் அனைருக்கும் பங்கு உள்ளது என்பதை உணர்வோம்.